கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் விளாசிய ரோஹித்.. சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி.. டி20 தொடரை வென்று அசத்தல்

By karthikeyan VFirst Published Jan 29, 2020, 4:37 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி டை ஆனதையடுத்து, சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா  - நியூசிலாந்து இடையேயான முதல் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா, இன்னிங்ஸின் 6வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 27 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா. அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் துபே மந்தமாக ஆடியதால், ரன்ரேட் குறைந்தது. அதனால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ரோஹித் சர்மா, ஸ்லோ டெலிவரியை தூக்கியடித்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் இந்திய அணியின் ஸ்கோர் எழவேயில்லை. விராட் கோலி ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயரும் பெரியளவில் அதிரடியாக ஆடாததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 

10வது ஓவர் முதல் 16வது ஓவர் வரையிலான 7 ஓவர்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் ஸ்கோர் மிடில் ஓவர்களில் படுமோசமாக குறைந்தது. கடைசி 4 ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயரும் கோலியும் 17 மற்றும் 19வது ஓவர்களில் முறையே ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்தில் 17 ரன்களும் கோலி 27 பந்தில் 38 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டேவும் ஜடேஜாவும் கடைசி ஓவரில் தலா ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவரில் இந்திய அணி 179 ரன்கள் மட்டுமே அடித்தது. 

Also Read - சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஹிட்மேன்

சிறிய மைதானமான ஹாமில்டனில் 180 ரன்கள் என்பது பெரிய சவாலான இலக்கு அல்ல. எனவே மிகவும் நம்பிக்கையுடன் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வழக்கம்போலவே தொடக்கம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். கப்டிலும் முன்ரோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தனர். கப்டில் 31 ரன்னிலும் முன்ரோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். 

அதிரடியாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்ததுடன், அதன்பின்னர் மேலும் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். வழக்கத்திற்கு மாறாக பும்ராவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். பும்ரா வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் வில்லியம்சன். 

18வது ஓவரை நன்றாக வீசிய சாஹல் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா வீசிய 19வது ஓவரில் டெய்லரும் வில்லியம்சனும் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்தனர். அந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த டெய்லர், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் வில்லியம்சன் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை சேஃபெர்ட் அடிக்கவில்லை. இதையடுத்து கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தையும் சேஃபெர்ட் அடிக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு ரன் ஓடி எடுத்தனர். போட்டி டை ஆனதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், டெய்லரை போல்டாக்கினார் ஷமி. இதையடுத்து போட்டி டையில் முடிந்தது. 

போட்டி டையில் முடிந்ததை அடுத்து, போட்டியின் முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. நல்ல ஃபார்மில் அருமையாக வீசிய ஷமியிடம் சூப்பர் ஓவரை கொடுக்காமல், இன்று படுமோசமாக வீசிய பும்ராவிடம் சூப்பர் ஓவரை கொடுத்தனர். போட்டியில் அவரது பவுலிங்கை அடித்து நொறுக்கியதை போலவே சூப்பர் ஓவரிலும் கப்டிலும் வில்லியம்சனும் இணைந்து அடித்து துவம்சம் செய்தனர். 

Also Read - ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் கூட ஆடமுடியாது.. கங்குலி அதிரடி

சூப்பர் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் சிங்கிள் அடிக்க, இரண்டாவது பந்தில் கப்டில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தை சிக்ஸர் விளாசிய வில்லியம்சன், நான்காவது பந்தில் பவுண்டரியும் ஐந்தாவது பந்தில் சிங்கிளும் அடித்தார். கடைசி பந்தில் கப்டில் பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 17 ரன்களை விளாசியது.

சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் ராகுலும் இறங்கினர். டிம் சௌதி அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ரோஹித், இரண்டாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ராகுல், அந்த பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி 2 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரோஹித் சர்மா.

Also Read - சமகால கிரிக்கெட்டின் 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள், 2 பவுலர்கள் யார்.. மெக்ராத்தின் அதிரடி தேர்வு

இதையடுத்து இந்த போட்டியை வென்ற இந்திய அணி 3-0 என தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவே தேர்வு செய்யப்பட்டார். 

click me!