ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தார் ரோஹித்.! இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 7:38 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகின்றன. 24ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல், இஷான் கிஷனின் அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1), ஃபின்ச்(8), மிட்செல் மார்ஷ்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஸ்மித் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 28 பந்தில் 37 ரன்கள் அடித்தார். 

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 41 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 152 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.

153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் வழக்கம்போலவே அடித்து ஆடி 31 பந்தில் 39 ரன்கள் அடித்தார். ஐபிஎல்லில் சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் ஃபார்முக்கு வந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தார். தனது இயல்பான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி, டி20 உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக மிகுந்த நம்பிக்கையளித்தார் ரோஹித். 41 பந்தில் 60 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஆகி சென்றார் ரோஹித்.

ஐபிஎல்லில் ரோஹித்தை போலவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த சூர்யகுமார் யாதவும் இந்த போட்டியில் நன்றாக ஆடினார். 27 பந்தில் சூர்யகுமார் 38 ரன்கள் அடிக்க, சிக்ஸர் அடித்து இலக்கை எட்டினார் ஹர்திக் பாண்டியா.

153 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
 

click me!