இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 3-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் நாளை நடக்கும் 5ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடுமையாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ரோகித் சர்மா கூறியிருப்பதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்பற்றும் அணுகுமுறை தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பின்பற்றி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவரது பேட்டிங்கை பென் டக்கெட் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கப்பா டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதிரடியான பேட்டிங் அணுகுமுறை இந்திய அணி ஏற்கனவே பின்பற்றி வருகிறது. ஆனால், கார் விபத்தில் சிக்கியதன் காரணமாக ரிஷப் பண்ட் எந்த விளையாட்டிலும் இடம் பெறவில்லை.
பேஸ்பால் பற்றி எனக்கு தெரியாது. இதற்கு முன் இங்கிலாந்து இங்கு வந்து விளையாடியதைவிட இப்போது சிறப்பாக விளையாடியிருக்கிறது என்று கூறியுள்ளார்.