சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையின் கீழ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2016 ஆம் ஆண்டு மட்டுமே ஒரு முறை டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால், அதில் சென்னையிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதே போன்று ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஜெயதேவ் உனத்கட் ரூ.1.60 கோடிக்கும், வணிந்து ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும், ஜதவேத் சுப்பிரமணியன் ரூ.20 லட்சத்திற்கும், ஆகாஷ் சிங் ரூ.20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு 6ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணையாளரும், யூடியூப்பருமான ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பேட் கம்மின்ஸ் சரிவர விளையாடவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் இதுவரையில் டி20 போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
இருந்த போதிலும் ஆஸ்திரேலியா டி20 அணியில் நிரந்தரமான இடம் பிடித்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியின் பிளேயின் 11ல் 4 வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் ஒரு இடத்தை பேட் கம்மின்ஸ் பிடித்திருக்கிறார். அதிலேயும் கேப்டன் வேறு என்று விமர்சித்துள்ளார்.
கடந்த சில சீசன்களை எடுத்துப் பார்த்தால், அவர் ரன்களை வாரி வழங்கியிருப்பார். பேட்டிங்கிலும் சொதப்பியிருப்பார். அப்படியிருக்கும் போது அவரை ஒரு கேப்டனாக நியமித்தது தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்றிருந்தாலும் கூட டி20 கேப்டனாக அவர் இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ்20 லீக் தொடரில் 2 முறை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டிராபியை வென்று கொடுத்த எய்டன் மார்க்ரம் கடந்த சீசனுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக இருந்தார். இந்த சீசனில் முதலில் கேப்டனாக இருந்த அவருக்குப் பதிலாகத் தான் தற்போது பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.