
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளார். இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நாளை தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான் விராட் கோலியின் 100வது டெஸ்ட். 100வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார் கோலி.
2014ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திவந்த விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவை பெறும் டிரெண்டை தொடங்கிவைத்ததே விராட் கோலி தான் எனலாம். போட்டியை டிரா செய்ய விரும்பாத கோலி, வெற்றிக்காகத்தான் போராடுவார். வெற்றி அல்லது தோல்வி என டெஸ்ட்டில் முடிவை பெற விரும்பிய கோலி, அதில் பெரும்பாலும் வெற்றியைத்தான் பெற்றார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-2019ல் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்திலும் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளிலும் அபாரமாக விளையாடியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபின்னர் திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் கோலி ஆடவுள்ளார்.
விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடவிருப்பதையொட்டி, முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். அந்தவகையில், விராட் கோலியை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படவுள்ள ரோஹித் சர்மா, கோலியின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி பயணம் நீண்டநெடியது. டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலி மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியை வேற லெவலில் மாற்றியிருக்கிறார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளில் செய்திருக்கும் பங்களிப்பு அபாரமானது. அவர் விட்டுச்சென்றதிலிருந்து நான் பொறுப்பேற்கிறேன். கோலி விட்ட இடத்திலிருந்து, ஒரு கேப்டனாக நான் பொறுப்பேற்பது சிறப்பானது. கடந்த 2-3 ஆண்டுகளில் நாங்கள் (இந்திய அணி) பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் கடந்த காலங்களில் செய்த சில சில தவறுகள் அனைத்தையுமே களைய முனைகிறோம் என்றார் ரோஹித் சர்மா.