
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இலங்கைக்கு எதிராக நாளை மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான், அவரது 100வது டெஸ்ட் போட்டி.
2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் விராட் கோலி, 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் 7962 ரன்களை குவித்துள்ளார். 2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திவந்த கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்து 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் கேப்டன்சியில், விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆடவுள்ளார்.
விராட் கோலி பல அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள நிலையில், கோலி ஆடியதில் தனது ஃபேவரைட் இன்னிங்ஸ் எதுவென்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, விராட் கோலியின் கேப்டன்சியில் மறக்கமுடியாத சம்பவம் என்றால் 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதுதான். ஒரு வீரராக விராட் கோலி ஆடியதில் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் என்றால், 2013 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் கோலி ஆடியதுதான். பேட்டிங் ஆடுவதற்கு மிகக்கடினமான பிட்ச் அது. பவுன்ஸும் வித்தியாசமாக இருக்கும். பேட்டிங் ஆடுவதற்கு சவாலான தென்னாப்பிரிக்காவில், அதுவும் ஸ்டெய்ன், மோர்கல், ஃபிலாண்டர், காலிஸ் ஆகிய சிறந்த பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடி, முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் 90+ ரன்களையும் குவித்தார் கோலி. அதுதான் எனது ஃபேவரைட் இன்னிங்ஸ். 2018 ஆஸி.,சுற்றுப்பயணத்தில் பெர்த்தில் கோலி அடித்த சதமும் எனக்கு பிடிக்கும் என்றார் ரோஹித்.
2013 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். 2வது இன்னிங்ஸிலும் கிட்டத்தட்ட சதத்தை நெருங்கினார். இளம் கோலியின் அந்த டெஸ்ட் இன்னிங்ஸைத்தான், ரோஹித் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.