இந்தூர் மாதிரியான ஆடுகளங்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடியது மாதிரி அடித்துத்தான் ஆடவேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளம் கடும் விமர்சனத்துக்குள்ளானதுடன், ஐசிசி அந்த ஆடுகளத்தை மோசமானது என்று மதிப்பிட்டு, 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.
3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூரில் முதல் ஓவரிலிருந்தே பந்து நன்றாக திரும்பியது. ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடுவதுதான் இந்திய வீரர்களின் பெரிய பலம் என்று கருதப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் குன்னெமன் மற்றும் 2வது இன்னிங்ஸில் நேதன் லயன் ஆகிய இருவரிடம் மண்டியிட்டு சரணடைந்தனர்.
முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய நிலையில், 2வது இன்னிங்ஸிலும் 163 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 76 ரன்கள் என்ற எளிய இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது இன்னிங்ஸில் புஜாரா சிறப்பாக ஆடி 59 ரன்கள் அடித்தார். இந்த இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் தான் கவனத்தை ஈர்த்தது. சற்று நிதானமாக தொடங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகள் ஆடிய பின், ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அவர்களுக்கு பயத்தை காட்டினார். அதனால் ஸ்பின்னை நிறுத்திவிட்டு மிட்செல் ஸ்டார்க்கை அழைத்துவந்து ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தினார் அந்த அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்தார்.
பந்து நன்றாக திரும்பும் ஆடுகளங்களில் பயந்து பயந்து தடுப்பாட்டம் ஆடுவதை விட ஷ்ரேயாஸ் ஐயர் மாதிரி அடித்து ஆடுவதுதான் ஒரே தீர்வு என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, இந்தூர் மாதிரியான பிட்ச்களில் ஆடும்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஆடியது மாதிரி அடித்துத்தான் ஆடவேண்டும். சில வீரர்கள் நின்று ஆடவேண்டும். சில வீரர்கள் அடித்து ஆடவேண்டும். எப்போதும் 100, 90, 80 ரன்கள் என்று அடிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஆடியதை போன்ற கேமியோ இன்னிங்ஸும் அணிக்கு பெரியளவில் உதவும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.