ஷர்துல் தாகூர் தான் இந்த விருதுக்கு தகுதியானவர்.. ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா கருத்து

By karthikeyan VFirst Published Sep 7, 2021, 3:36 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா, அந்த விருதுக்கு ஷர்துல் தாகூரும் தகுதியானவர் என்று தெரிவித்தார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி , ஷர்துல் தாகூரின் அதிரடி அரைசதம்(36 பந்தில் 57 ரன்கள்) மற்றும் விராட் கோலியின் அரைசதம்(50) ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களையாவது அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது. 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்தும் புஜாராவும் இணைந்து அருமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அபாரமாக ஆடி சதமடித்த ரோஹித் 127 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த புஜாரா 61 ரன்னில் ஆட்டமிழந்தார். கோலி 44 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜா(17), ரஹானே(0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.

ஆனால் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின்(50) அரைசதங்கள், பும்ரா(24), உமேஷ்(25) பொறுப்பான பங்களிப்பால் 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்த இந்திய அணி, 368 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது.

368 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு சுருண்டு 157 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக, 2வது இன்னிங்ஸில் சதமடித்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து, பெரிய ஸ்கோரை அடிக்க காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மாவோ, இந்த விருதுக்கு ஷர்துல் தாகூரும் தகுதியானவர் என்று தெரிவித்தார்.

அது உண்மையும் கூட.. ஆட்டநாயகன் விருது ஷர்துலுக்கு கொடுத்திருந்தாலும் தகும். முதல் இன்னிங்ஸில் மெயின் பேட்ஸ்மேன்களே சொதப்பிய நிலையில், அதிரடியாக ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்ததுடன், இந்திய அணி 191 ரன்கள் அடிக்க காரணமாக இருந்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் களத்தில் நன்கு செட்டில் ஆகி சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆலி போப்பின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 60 ரன்கள் அடித்தார். பவுலிங்கும் சிறப்பாக வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீழ்த்திய 2 விக்கெட்டுகளுமே முக்கியமானவை. முதல் விக்கெட்டுக்கு ரோரி பர்ன்ஸும், ஹசீப் ஹமீதும் சேர்ந்து 100 ரன்களை சேர்த்த நிலையில், ரோரி பர்ன்ஸை 50 ரன்னுக்கு முதல் விக்கெட்டாக வீழ்த்தி இந்திய அணிக்கு பிரேக் கொடுத்தார். பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் அவர் தான் வீழ்த்தினார்.

எனவே அவரது சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், அவரை பாராட்டும் விதமாகவும், தான் பெற்ற ஆட்டநாயகன் விருதுக்கு ஷர்துல் தாகூரும் தகுதியானவர் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!