எல்லா ஃபார்மட்டுலயும் ரோஹித் கில்லிடா.. எல்லாத்துலயும் டாப்ல இருக்கும் ஹிட்மேன்

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 1:46 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடிவருகிறார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோஹித், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கோலோச்சிவரும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதுவே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த, அதுபோக அனைவரின் கவனமும் ரோஹித் மீதே இருந்தது. அது கூடுதல் நெருக்கடியை அளித்தது. 

ஆனாலும் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் முதல் இன்னிங்ஸில் தனது இயல்பான ஆட்டத்தை தெளிவாகவும் சிறப்பாகவும் ஆடிய ரோஹித் சர்மா 176 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். முதல் இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடிக்கும் வரை 3 சிக்ஸர்களை விளாசினார். இதுவரை மொத்தமாக இந்த போட்டியில் 9 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதுதான் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக ரோஹித் இருக்கும் நிலையில், இப்போது டெஸ்ட் போட்டியிலும் அதிக சிக்ஸர்கள் விளாசிய பெருமையை பெற்றுள்ளார். இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார். 

ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்களையும் டி20 போட்டியில் 10 சிக்ஸர்களையும் விளாசியுள்ள ரோஹித், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் எட்டியவரை 9 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த போட்டியில் இன்னும் சில சிக்ஸர்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது. 
 

click me!