முரளி விஜய் அபார சதம்.. தமிழ்நாடு அணி வெற்றி

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 11:34 AM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணியின் தொடக்க வீரர் காம்ரான் இக்பால் அபாரமாக ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜம்மு காஷ்மீர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் காம்ரான் இக்பால் நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த அவர் 67 ரன்கள் அவுட்டாக, அதன்பின்னர் ஷுபம் பண்டிரும் அப்துல் சமாத்தும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

இருவருமே அரைசதம் அடித்து ஜம்மு காஷ்மீர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்டிர் 66 ரன்களிலும் அப்துல் 50 ரன்களிலும் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் காஷ்மீர் அணி 238 ரன்கள் அடித்தது. 

239 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்தும் முரளி விஜயும் இறங்கினர். அபினவ் முகுந்த் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முரளி விஜயுடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இருந்த முரளி விஜய் கடந்த ஆண்டு அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் தான் ஒரு தரமான வீரர் என்பதை பறைசாற்றும் விதமாக சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார் முரளி விஜய். 131 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 117 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மற்றொரு வீரரான பாபா அபரஜித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் அடித்து தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்தார். 

48வது ஓவரில் இலக்கை எட்டிய தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!