தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செம சாதனை படைத்த அஷ்வின்

By karthikeyan VFirst Published Oct 5, 2019, 9:58 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
 

விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயன்க் அகர்வால் 215 ரன்களையும் ரோஹித் சர்மா 176 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. மார்க்ரம், டி ப்ருய்ன் ஆகிய இருவரையும் களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே அஷ்வின் வீழ்த்திவிட்டார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நைட் வாட்ச்மேனாக வந்த டேன் பீட்டை ஜடேஜா வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணி 3 விகெக்ட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமாவை இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். ஆனால் அதன்பின்னர் எல்கரும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டுப்ளெசிஸை 55 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். டுப்ளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக்கும் சிறப்பாக ஆடினார். 

150 ரன்களை கடந்த எல்கரை 160 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவரது விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஜடேஜா. இது ஜடேஜாவின் 200வது டெஸ்ட் விக்கெட். எல்கர் அவுட்டானாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கும் சதம் விளாசினார். 

சதத்திற்கு பின்னரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கை பக்காவா பிளான் பண்ணி தூக்கினார் அஷ்வின். 111 ரன்கள் அடித்திருந்த டி காக்கிற்கு முதல் இரண்டு பந்துகளை நன்றாக டர்ன் செய்து போட்ட அஷ்வின், அடுத்த பந்தை டர்ன் செய்யாமல் நேராக வீசினார். அந்த லைனை சற்றும் எதிர்பார்த்திராத டி காக், பந்து டர்ன் ஆகி செல்லும் ஆங்கிளை கணித்து பேட்டை விட, பந்து நேராக சென்று ஸ்டம்பை அடித்தது. 

டி காக்கை தொடர்ந்து ஃபிளாண்டரையும் அஷ்வின் வீழ்த்தினார். மூன்றாவது நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை அடித்திருந்தது. நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை தென்னாப்பிரிக்க வீரர்கள்  தொடர்கின்றனர். 

தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் முடிவில் இழந்திருந்த 8 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் அஷ்வின் வீழ்த்தியவை. மார்க்ரம், டி ப்ருய்ன், டுப்ளெசிஸ், டி காக், ஃபிளாண்டர் ஆகிய ஐந்து பேரையும் அஷ்வின் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 27வது முறை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் தலா 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இவர்களின் சாதனையை அஷ்வின் முறியடித்துவிட்டார்.

இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேசவ் மஹராஜின் விக்கெட்டையும் அஷ்வின் வீழ்த்திவிட்டார். இது இந்த இன்னிங்ஸில் அஷ்வினின் 6வது விக்கெட். 
 

click me!