
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9 ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்களும், அஷ்மதுல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, இந்தப் போட்டியின் மூலமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கோப்பையை தொடக்கும் போது 17 இன்னிங்ஸ்களில் 978 ரன்கள் உடன் தொடங்கினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இன்று 19ஆவது இன்னிங்ஸில் விளையாடினார். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
முதல் ஓவரில் மட்டுமே 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2ஆவது ஓவரில் 5 ரன்கள் என்று மொத்தம் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் 17 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் அடித்து 1000 ரன்களை கடந்தார். இதன் மூலமாக அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது டேவிட் வார்னர் 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார்.
உலகக் கோப்பையில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தவர்கள்:
19 – டேவிட் வார்னர்
19 – ரோகித் சர்மா
20 – சச்சின் டெண்டுல்கர்
20 – ஏபி டிவிலியர்ஸ்
21 – சர் விவியன் ரிச்சர்ட்ஸ்
21 – சவுரவ் கங்குலி
மேலும், இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
554* - ரோஹித் சர்மா
553 - கிறிஸ் கெய்ல்
476 - ஷாஹித் அப்ரிடி
398 - பிரெண்டன் மெக்கல்லம்
383 - மார்ட்டின் குப்டில்