இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 272 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட் 6.4ஆவது ஓவரில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு விழுந்தது. ஆம், தொடக்க வீரர் ஜத்ரன் 22 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார்.
இவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். இதற்கிடையில் குர்பாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹஷ்மாதுல்லா ஷாகிடி களமிறங்கினார். ஒருபுறம் ரஹ்மத் ஷா 16 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து அஷ்மதுல்லா உமர்சாய் களமிறங்கினார். அவர், 69 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து முகமது நபி களமிறங்கினார். இதற்கிடையில் 88 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 80 ரன்கள் குவித்த கேப்டன் ஷாகிடி ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பின்வரிசை வீரர்கள் நஜிபுல்லா ஜத்ரன் 2, ரஷீத் கான் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக முஜீப் உர் ரஹ்மான் 10 ரன்களுடனும், நவீன் உல் ஹக் 9 ரன்களுடனும் களத்தில் இருக்கவே, ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட் கைப்பற்றினார். இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.