
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிடும். நியூசிலாந்து அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால், இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடுகிறது.
2வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ராபின் உத்தப்பா.
இந்த தொடரில் கோலி ஆடவில்லை. எனவே முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் ஆடினார். சூர்யகுமார் 3ம் வரிசையில் இறங்கி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இலக்கை நெருங்கிய நிலையில், 2வது விக்கெட் விழுந்ததால், 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் இறக்கப்படாமல் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். ஆனால் சூர்யகுமாரும் ஆட்டமிழந்ததையடுத்து, 5ம் வரிசையில் இறக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 8 பந்தில் 5 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப்பும் மந்தமாக ஆடியதால் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டி, கடைசி ஓவர் வரை சென்றது.
இந்நிலையில், இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோரின் திறமையின் அடிப்படையில், அவரவர்க்கு தகுந்த பேட்டிங் ஆர்டரை பரிந்துரைத்துள்ளார் ராபின் உத்தப்பா.
இதுகுறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, சூர்யகுமார் யாதவ் எந்த பேட்டிங் ஆர்டரிலும் ஆடக்கூடியவர். அவர் 5 மற்றும் 6ம் வரிசைகளில் சிறப்பாக ஆடி நான் பார்த்திருக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயர் 3ம் வரிசைக்கு சரியாக இருப்பார். ஏனெனில் ஷ்ரேயாஸ் களத்தில் நிலைக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வார். செட்டில் ஆனபின்னர் அடித்து ஆடக்கூடியவர் ஷ்ரேயாஸ். ஆனால் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடவல்லவர் என்பதால் அவரை 4 அல்லது 5ம் வரிசையில் இறக்கலாம்.
அப்படி சூர்யகுமாரை 4 அல்லது 5ம் வரிசையில் இறக்கினால், அது ரிஷப் பண்ட்டுக்கு நம்பிக்கையளிக்கும். அவர் ஆட்டத்தை முடித்துவைக்க உதவிகரமாக இருக்கும். இதுமாதிரியான சிறிய ஸ்டெப்புகளை டி20 உலக கோப்பைக்கான முன்னெடுப்பாக நாம் எடுத்துவைக்க வேண்டும் என்று உத்தப்பா தெரிவித்தார்.