2007 டி20 உலக கோப்பையில் நடந்த ஆச்சரியம்.! சாத்தியமானது எப்படி? பின்னணியில் இருந்த ஹீரோ யார்? உத்தப்பா அதிரடி

By karthikeyan VFirst Published Aug 14, 2020, 6:12 PM IST
Highlights

2007 டி20 உலக கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் போல்டு அவுட் முறையில், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பந்துவீசி போல்டு அவுட் செய்தது எப்படி என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
 

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை மோதின. லீக் சுற்றிலும் இறுதி போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இரண்டிலுமே இந்தியா தான் வெற்றி.

லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி டர்பனில் நடந்தது. அந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த போட்டி டை ஆனதையடுத்து, இப்போது வீசப்படுவதை போல சூப்பர் ஓவர் வீசப்படாமல் வித்தியாசமான முறை கையாளப்பட்டது.

ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் அணி, அவர்களது பிரைம் பவுலர்களை தேர்வு செய்து வீசவைத்தது. பாகிஸ்தான் சார்பில் முதல் மூன்று பந்துகளை வீசிய யாசிர் அராஃபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகிய மூவருமே ஸ்டம்பை தாக்க தவறிவிட்டனர். ஆனால் இந்திய அணி சார்பில் வீசிய மூவருமே ஸ்டம்பில் அடித்தனர். இந்திய அணி சார்பில் பந்துவீசிய மூவரில் இருவர் பேட்ஸ்மேன்கள்; பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே பிரைம் ஸ்பின்னர். ஆனால் மூவருமே கிளீன் போல்டு செய்து அசத்தினர். இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு பந்தை கூட ஸ்டம்பில் போடமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணியில் தொழில்முறை பவுலர்களால் செய்ய முடியாததை, சேவாக், ராபின் உத்தப்பா ஆகிய பேட்ஸ்மேன்களை வைத்து சாதித்துக்காட்டியது இந்திய அணி. அதற்கு, அப்போதைய பவுலிங் பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத், பேட்ஸ்மேன்களை போல்டு அவுட் செய்து பயிற்சி எடுப்பதை வழக்கமாக்கியதுதான் காரணம். சேவாக், உத்தப்பா ஆகிய பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் பந்துவீசியதையும் சிறப்பாக போல்டு அவுட் செய்ததையும் பார்த்துத்தான் அவர்களை வீசவைத்தார் வெங்கடேஷ் பிரசாத்.

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து ராபின் உத்தப்பா ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ராபின் உத்தப்பா, பயிற்சிக்கு முன்பு வாம் அப் செய்யும்போது, கால்பந்து விளையாடுவதை விட, பவுலர்கள் vs பேட்ஸ்மேன்களுக்கு இடையே போல்டு அவுட் செய்யும் போட்டி வைப்பார் வெங்கடேஷ் பிரசாத். அதில், பேட்ஸ்மேன்களில் சேவாக், ரோஹித் மற்றும் நான் சிறப்பாக பந்துவீசி அடிக்கடி போல்டு அவுட் செய்வோம். அந்த பயிற்சி பயன்பட்டது. எனக்கு வாய்ப்பு கொடுத்த கிரெடிட் தோனியையே சேரும். நான் பவுலர் கிடையாது; அதுவும் இளம் வீரர். அப்படியிருக்கையில், என்னால் போல்டு அவுட் செய்யமுடியும் என்று கேப்டன் தோனியிடம் வாய்ப்பு கேட்ட எனக்கு, சற்றும் யோசிக்காமல் சம்மதித்து வாய்ப்பு கொடுத்தார் தோனி என்று ராபின் உத்தப்பா தெரிவித்தார்.
 

click me!