உங்கள் பேட்டிங்கின் ரகசியம் என்ன..? வாசிம் அக்ரமுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த லெஜண்ட் பேட்ஸ்மேன்

By karthikeyan VFirst Published Aug 14, 2020, 4:28 PM IST
Highlights

தனது பவுலிங்கை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மார்டின் க்ரோவிடம், வாசிம் அக்ரம் தான் எழுப்பிய கேள்வி மற்றும் அதற்கு அவர் அளித்த பதில் குறித்து பேசியுள்ளார்.
 

பாகிஸ்தான் அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பலரை கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்துள்ளனர். அந்தந்த காலக்கட்டத்தில் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் பாகிஸ்தான் அணியிலிருந்து கண்டிப்பாக இருப்பார். 

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதுடன், அருமையாக ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடியவர். 1984ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் ஆடிய வாசிம் அக்ரமும் அவரது ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னர் வக்கார் யூனிஸும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 414 விக்கெட்டுகளையும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் வாசிம் அக்ரம். அவரது காலக்கட்டத்தில் ஆடிய பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். 

விவியன் ரிச்சர்ட்ஸ், மார்டின் க்ரோவ், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் போன்ற பல்வேறு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ளார் வாசிம் அக்ரம். ஆனால் அவர் பந்துவீசியதிலேயே யார் பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 

வாசிம் அக்ரமின் சிறப்பம்சமே அவரது ரிவர்ஸ் ஸ்விங் தான். ரிவர்ஸ் ஸ்விங் கலையை நன்கறிந்தவர் வாசிம் அக்ரம். தனது ரிவர்ஸ் ஸ்விங்கின் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பலரை தெறிக்கவிட்ட வாசிம் அக்ரம், தனது பவுலிங்கை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஆடிய பேட்ஸ்மேன் நியூசிலாந்தின் மார்டின் க்ரோவ் தான் என்று ஏற்கனவே பல முறை தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில், வக்கார் யூனிஸ் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த தொடரில் 2 போட்டிகளில் ஆடிய வாசிம் அக்ரம், 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் இணைந்து மிரட்டிய தொடர்களில் அதுவும் ஒன்று. அந்த தொடரில் நியூசிலாந்து வீரர்கள் அனைவருமே திணற, மார்டின் க்ரோவ் மட்டும் வாசிம் அக்ரமின் ரிவர்ஸ் ஸ்விங்கை அருமையாக ஆடினார்.

அதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், புதிய பந்தில் 5-6 ஓவர்கள் வீசியதுமே, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்துவிடுவேன். அது எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு தொடரில் வக்கார் யூனிஸ் 30(29) விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான் 16(10) விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அந்த தொடரில் மார்டின் க்ரோவ் 2 சதங்கள்(1) அடித்தார். அந்த தொடர் முடிந்ததும், நான் அவரிடம் சென்று, உங்கள் பேட்டிங்கின் ரகசியம் என்ன? என்று கேட்டேன்.

அதற்கு, நான் உங்களுடைய பவுலிங்கை ஃப்ரண்ட் ஃபூட்டில் எதிர்கொண்டு ஆட முயற்சிக்கிறேன். இன்ஸ்விங்கர்களை தொடர்ந்து நான் சரியாக ஆடுவதால், அவுட் ஸ்விங்கர்கள் தானாகவே தவறவிடுகிறார்கள் என்று க்ரோவ் எனக்கு பதிலளித்தார் என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

1992 உலக கோப்பையில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் அரையிறுதியில் மோதின. அந்த போட்டியிலும் மார்டின் க்ரோவ் தான் நியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடினார். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஜோடியை எதிர்கொள்வதில் மார்டின் க்ரோவ் வல்லவர். அவர்களது பவுலிங்கை அருமையாக ஆடி ஸ்கோர் செய்திருக்கிறார். அதனால் தான் அடிக்கடி வாசிம் அக்ரம், மார்டின் க்ரோவை பற்றி பேசுகிறார்.

click me!