தோனியின் புத்திசாலித்தனத்தால் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.. உத்தப்பா சொன்ன சுவாரஸ்ய தகவல்..! வீடியோ

By karthikeyan VFirst Published May 23, 2020, 5:32 PM IST
Highlights

2007 டி20 உலக கோப்பையில் நடந்த அரிய சம்பவத்தில், இந்திய அணி தனது திறமையை நிரூபித்து முத்திரையை பதித்ததுடன், பாகிஸ்தான் பட்ட அசிங்கத்திற்கும் தோனியின் புத்திசாலித்தனம் தான் காரணம் என உத்தப்பா தெரிவித்துள்ளார். 
 

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை மோதின. லீக் சுற்றிலும் இறுதி போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இரண்டிலுமே இந்தியா தான் வெற்றி.

லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி டர்பனில் நடந்தது. அந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த போட்டி டை ஆனதையடுத்து, இப்போது வீசப்படுவதை போல சூப்பர் ஓவர் வீசப்படாமல் வித்தியாசமான முறை கையாளப்பட்டது.

ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் அணி, அவர்களது பிரைம் பவுலர்களை தேர்வு செய்து வீசவைத்தது. பாகிஸ்தான் சார்பில் முதல் மூன்று பந்துகளை வீசிய யாசிர் அராஃபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகிய மூவருமே ஸ்டம்பை தாக்க தவறிவிட்டனர். ஆனால் அதேவேளையில், இந்திய அணியின் சார்பில் வீசிய சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய மூவருமே ஸ்டம்பை கிளீன் போல்டு செய்து அசத்தினர். இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு பந்தை கூட ஸ்டம்பில் போடமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான்.

இந்நிலையில், இந்திய அணி சார்பில், பந்துவீசிய மூவரில் ஒருவரான உத்தப்பா, பாகிஸ்தான் பவுலர்களால் முடியாதது, பார்ட் டைம் பவுலர்களான நமது இந்திய வீரர்களால் எப்படி முடிந்தது என்ற ரகசியத்தை கூறியுள்ளார்.

அதுகுறித்து பேசிய உத்தப்பா, அந்த சம்பவத்தின் போது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல், வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் இடத்திலேயே நின்றார். ஆனால் தோனி, பவுலர்கள் ஸ்டம்பில் அடிப்பதற்கு வசதியாக, ஸ்டம்பிற்கு பின்னால் வலதுபுறமாக நின்றார். தோனியை நோக்கி பந்தை வீச வேண்டும் என்பதுதான் திட்டம். நாங்கள் சரியாக வீசினோம். பந்தும் ஸ்டம்பில் பட்டது. ஆனால் காம்ரான் அக்மல் வழக்கமான விக்கெட் கீப்பிங் பாணியை பின்பற்றினார். தோனியின் உத்தியால் தான் நமது வீரர்களுக்கு அது சாத்தியமாயிற்று என்று உத்தப்பா தெரிவித்தார். அந்த வீடியோ இதோ...
 

click me!