சென்னையில் ஊரடங்கை மீறி காரில் சென்ற கிரிக்கெட் வீரர்..! அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த காவல்துறை

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 5:01 PM IST
Highlights

சென்னையில் ஊரடங்கை மீறி காரில் சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கை காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 67,468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. 45,814 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருவதால், சென்னை உள்ளிட்ட சில ஜூன் 30 வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கை மிகவும் கடுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. 

போலீஸாரும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அத்தியாவசிய தேவைக்கு கடைகளுக்கு செல்வதாக இருந்தால், 2 கிமீ தொலைவிற்குட்பட்ட கடைகளுக்கு நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கின் காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை ராபின் சிங் முகக்கவசம் அணிந்து காரில் சென்றுள்ளார். சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து காரில் வந்த அவரை, சாஸ்திரி நகர் போலீஸார் நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். அவர் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர் ராபின் சிங் என்பது போலீஸாருக்கு தெரியவில்லை. 

காரில் செல்வதற்கான காரணம் கேட்டபோது, காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க செல்வதாக கூறியுள்ளார். 2 கிமீ தொலைவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு நடந்து மட்டுமே சென்று பொருள் வாங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராபின் சிங் இ பாஸ் இல்லாமல் காரில் சென்றதால், அவரது காரை பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து அனுப்பியுள்ளனர். 

இவையனைத்துமே, அவர் ராபின் சிங் என்பதே தெரியாமல் நடந்தது. ஆனால் முகக்கவசம் அணிந்திருந்த ராபின் சிங், போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன், தான் யார் என்பதையும் கடைசி வரை சொல்லாமலேயே, சென்றுவிட்டார். போலீஸார் காரை பறிமுதல் செய்ததையடுத்து, தனது நண்பர் ஒருவரை வரவழைத்து அந்த வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். 

ராபின் சிங் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். மிகச்சிறந்த ஃபீல்டரான ராபின் சிங், இந்திய கிரிக்கெட்டின் ஃபீல்டிங் முகமாக திகழ்ந்தவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் ராபின் சிங் உள்ளார்.

click me!