டிவில்லியர்ஸால் தான் ஐபிஎல்லில் இரட்டை சதத்தை தவறவிட்டேன்..! கிறிஸ் கெய்ல் பகிரங்க அட்டாக்

By karthikeyan VFirst Published Jun 25, 2020, 2:32 PM IST
Highlights

2013 ஐபிஎல்லில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மனம் திறந்துள்ளார்.
 

2013 ஐபிஎல்லில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல்லில் கேகேஆர்(2008-2010) ஆர்சிபி(2011-2017), கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் ஆடியுள்ளார். 2018லிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடுகிறார். 

ஐபிஎல்லில் அதிகமாக ஆர்சிபி அணிக்காகத்தான் ஆடியுள்ளார் கெய்ல். ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்(175), ஐபிஎல்லில் அதிகமான சிக்ஸர்கள்(326) ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல்.

ஐபிஎல்லில் 125 போட்டிகளில் ஆடி 6 சதங்களை விளாசியுள்ளார் கெய்ல். அதில் மிகச்சிறப்பான சதம் என்றால், அது 2013 ஐபிஎல்லில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்ததுதான். அந்த போட்டியில் கெய்ல் அடித்த 175 ரன்கள் தான். ஐபிஎல்லில் ஒரு இன்னிங்ஸில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன். 

அந்த போட்டியில் கெய்லின் அதிரடியான சதத்தால் 20 ஓவரில் 263 ரன்களை குவித்த ஆர்சிபி அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கெய்ல், வெறும் 66 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அந்த போட்டியில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் கூட, டிவில்லியர்ஸால் அது முடியாமல் போனதாக கெய்ல் கூறியுள்ளார். 

இந்திய வீரர்களும், ஐபிஎல்லில் கெய்ல் ஆடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடும் அவரது சக வீரர்களுமான கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலுடனான உரையாடலில் கெய்ல் அந்த சம்பவம் குறித்து பேசினார். 

அந்த சம்பவம் குறித்து பேசிய கெய்ல், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அந்த போட்டி தொடங்கிய இரண்டே ஓவரில் மழை குறுக்கிட்டது. மழை வந்ததால் களத்தில் இருந்து வெளியேறி, டிரெஸிங் ரூம் வந்தபோது, ரவி ராம்பாலிடம் 170-180 ரன்கள் அடித்தாக வேண்டும். ஆடுகளம் நன்றாக இருப்பதால் 180 ரன்களாவது அடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

அதன்பின்னர் நான் நல்ல ரிதத்திற்கு வந்தேன். சில நேரங்களில், நாம் களத்தில் நிலைத்துவிட்டால், இனிமேல் நாம் அவுட்டாவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றும். எனக்கு அன்றைக்கு அப்படித்தான் இருந்தது. கடைசியில் 175 ரன்களுடன் அந்த இன்னிங்ஸை முடித்தேன். டிவில்லியர்ஸ், டெத் ஓவர்களில் வந்து காட்டடி அடித்தார். அன்று அவர் மட்டும் கடைசியில் வந்து அதிரடியான பேட்டிங்கை ஆடவில்லையென்றால், நான் இரட்டை சதமடித்திருப்பேன் என்று கெய்ல் தெரிவித்தார். 

அந்த குறிப்பிட்ட போட்டியில் ஆர்சிபி அணியின் இன்னிங்ஸில் கடைசி 22 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் களத்திற்கு வந்த டிவில்லியர்ஸ் வெறும் 8 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடி 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 31 ரன்களை விளாசிவிட்டு சென்றார். டிவில்லியர்ஸ் களத்திற்கு வரும்போது கெய்ல் 155 ரன்களுடன் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

click me!