இந்திய ஸ்பின்னர் தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்..! வெறும் 3 இந்திய வீரர்களுக்குத்தான் அணியில் இடம்

By karthikeyan VFirst Published Jun 24, 2020, 5:02 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் ரிஸ்ட் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா தனது ஆல்டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், முன்னாள் - இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் பியூஷ் சாவ்லாவும் தனது ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா, இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஆடவில்லை. வெறும் 3 சர்வதேச டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில், பியூஷ் சாவ்லா தனது ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். உலக டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கையும் நான்காம் வரிசை வீரராக சச்சின் டெண்டுல்கரையும் ஐந்தாம் வரிசை வீரராக பிரயன் லாராவையும் தேர்வு செய்துள்ள பியூஷ் சாவ்லா, விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட்டை தேர்வு செய்துள்ளார். 

பியூஷ் சாவ்லா சிறந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும், ராகுல் டிராவிட்டை புறக்கணித்துவிட்டார். அதேபோல சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான குமார் சங்கக்கராவை எடுக்காமல் கில்கிறிஸ்ட்டை எடுத்துள்ளார். ஆல்ரவுண்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கர்ட்லி ஆம்ப்ரூஸ் ஆகிய இருவரையும் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின் பவுலர்களாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவரையும் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். 

பியூஷ் சாவ்லாவின் ஆல்டைம் உலக டெஸ்ட் லெவனில், சச்சின், சேவாக், கபில் தேவ் ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸை தேர்வு செய்துள்ளார். 

பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்:

வீரேந்திர சேவாக், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), கபில் தேவ், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கர்ட்லி ஆம்ப்ரூஸ்.

12வது வீரர் - ஜாக் காலிஸ்.
 

click me!