ஒப்புக்கு சப்பாணி ரிஷப் பண்ட்.. உறுதி செய்த இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 9, 2020, 11:37 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் உப்புக்கு சப்பாணியாக எடுக்கப்பட்டுள்ளார். 

தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், நாளுக்கு நாள் அணியில் தனக்கான இடத்தை இழந்துவருகிறார். 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் நோக்கில், மூன்றுவிதமான அணிகளிலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும். ஆனால் ரிஷப் பண்ட் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளாமல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பினார். 

ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பியபோதிலும், அவர் இளம் வீரர் மற்றும் கெரியரின் தொடக்கத்தில் இருக்கிறார் என்பதால் எதார்த்தத்தை உணர்ந்த அணி நிர்வாகம், அவருக்கு அழுத்தம் கொடுக்காமல் தொடர் வாய்ப்புகளை அளித்தது. ஆனால் அவர் சரியாக ஆடவில்லை. 

இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரிஷப் பண்ட் ஓரங்கட்டப்பட்டார். ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால் திறமையான விக்கெட் கீப்பர் ஆடுவது அவசியம் என்பதால், அனுபவ விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடர்களில் சஹா தான் விக்கெட் கீப்பராக ஆடினார். அதேவேளையில் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பராக ஆடினார். ஆனால், ரிஷப் பண்ட் சரியாக ஆடாததையடுத்து, சஹாவை உட்காரவைத்துவிட்டு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியதை அடுத்து, மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங்கும் செய்தார். அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட ராகுல் தனது விக்கெட் கீப்பிங் திறமையை நிரூபித்தார். 

எனவே நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிகிறது என்பதால், அணி நிர்வாகமும் ரிஷப் பண்ட் மீது ஆர்வம் காட்டவில்லை. 

ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பியதால் அவருக்கான இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறார். ரிஷப் பண்ட் இன்னும் சில போட்டிகளிலும் சொதப்புவாரேயானால் அவருக்கான இடமே சந்தேகமாகிவிடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் என குறிப்பிடவில்லை. 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு! 3 சீனியர் வீரர்கள் கம்பேக்

பெரும்பாலும் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வதற்குத்தான் அதிகமான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஹர்திக் பாண்டியாவும் அணிக்கு திரும்பிவிட்டார். எனவே அவர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார். அதனால் ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார். அதனால்தான் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் என்று கூட குறிப்பிடவில்லை. இந்திய அணியின் தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், தற்போது ஒப்புக்கு சப்பாணியாக அணியில் எடுக்கப்பட்டு பென்ச்சில் உட்காரவைக்கப்படுகிறார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில். 

click me!