#ICCWTC ஃபைனல்: லக்குல கிடைத்த சான்ஸை டக்குனு வேஸ்ட் ஆக்கிய ரிஷப் பண்ட்..!

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 4:41 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரிஷப் பண்ட் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாளான அன்றைய நாள் ஆட்டம் முழுவதுமே ரத்தானது. 2ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய நிலையில், அதுவும் முழுதாக நடைபெறவில்லை.

2ம் நாள் ஆட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டது. 3வது செசன் கிட்டத்தட்ட முழுமையாகவே பாதிக்கப்பட்டது. அதனால் 2ம் நாள் ஆட்டத்தில் 64.4 ஓவர்கள் வீசப்பட்டன. அதில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது. நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த ரோஹித் 34 ரன்களிலும் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, புஜாரா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் சிறப்பாக ஆடிய கோலியும் ரஹானேவும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் ரன்னே அடிக்காமல் கைல் ஜாமிசனின் பந்தில் 44 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் கேப்டன் கோலி. அதன்பின்னர் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 4 ரன்னில் நடையை கட்டினார்.

ரிஷப் பண்ட் கைல் ஜாமிசன் வீசிய 70வது ஓவரில் ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். ஆனால் அம்பயர்ஸ் கால் விதியால் தப்பினார். ரிஷப் பண்ட் ரன்னே அடிக்காத நிலையில், கைல் ஜாமிசன் வீசிய பந்து அவரது கால்காப்பை தாக்கியது. அதற்கு அம்பயர் அவுட் கொடுக்காததையடுத்து, மிகவும் க்ளோசான அந்த எல்பிடபிள்யூவிற்கு டி.ஆர்.எஸ் எடுத்தார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். பந்தின் பாதி பகுதி லெக் ஸ்டம்ப்பை தாக்கியதால், அம்பயர்ஸ் கால் என்று தேர்டு அம்பயர் தெரிவித்தார். களநடுவர் நாட் அவுட் கொடுத்திருந்ததால் தப்பினார் ரிஷப். ஒருவேளை களநடுவர் அவுட் கொடுத்திருந்தால், ரிஷப் பண்ட் அவுட். 

ஆனால், அதிர்ஷ்டத்தால் கிடைத்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாத ரிஷப் பண்ட், அதே ஜாமிசனின் பந்தில் 74வது ஓவரில் வெறும் 4 ரன்னிற்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ரஹானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

click me!