தோனியை அசால்ட்டா தூக்கியடித்த ரிஷப் பண்ட்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை

By karthikeyan VFirst Published Sep 2, 2019, 4:37 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் ரிஷப் பண்ட். அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தனது டெஸ்ட் கெரியரை கெத்தாக தொடங்கினார் ரிஷப் பண்ட். 

ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பரவாயில்லை என்றாலும், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து ரிஷப் பண்ட் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக்கும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரையே விக்கெட் கீப்பராக எடுக்க வேண்டுமே தவிர, பேட்டிங்கை கருத்தில்கொண்டு எடுக்கக்கூடாது என்று ரிஷப் பண்ட் வாரி தூற்றப்பட்டார். 

அதன்பின்னர் ஆஸ்திரேலிய தொடரிலும் விக்கெட் கீப்பிங்கில் சில தவறுகளை செய்தார். ஆனால் இங்கிலாந்து தொடரை விட மேம்பட்டிருந்தார். ரிஷப் பண்ட் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதால், அவர் தவறிழைத்தாலும் அவரது வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவரும் விக்கெட் கீப்பிங்கில் மேம்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இஷாந்த் சர்மா பவுலிங்கில் பிராத்வெயிட்டுக்கு ரிஷப் பண்ட் பிடித்த கேட்சின் மூலம், விக்கெட் கீப்பராக 50 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். 

தோனி 15வது போட்டியில் தான் 50வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், ரிஷப் பண்ட் 11வது போட்டியிலேயே வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மார்க் பவுச்சர், டிம் பெய்ன், ஜானி பேர்ஸ்டோ ஆகிய மூவரும் 10 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி மூவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 
 

click me!