ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அப்படியொரு முடிவை எடுத்தால் அதிகமா சந்தோஷப்படுற ஆளு நான் தான்.. பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 19, 2019, 5:14 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை அனுபவித்த ஸ்மித்தும் வார்னரும் தடைக்கு பின் மீண்டும் அணியில் இணைந்து ஆடிவருகின்றனர். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில், டெஸ்ட் போட்டி ஒன்றில் பந்தை சேதப்படுத்தியதால் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதனால் அவர்கள் வகித்துவந்த பொறுப்பும் பறிபோனது. டெஸ்ட் அணிக்கு டிம் பெய்னும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஆரோன் ஃபின்ச்சும் பொறுப்பேற்றனர். இருவரும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையில், நடந்துமுடிந்த ஆஷஸ் தொடரில் ஸ்மித் தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். 

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 2-2 என சமனடைந்தது. ஏற்கனவே ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணியிடம் உள்ளதால், இந்த தொடர் சமனடைந்ததால் ஆஸ்திரேலிய அணியே தொடர்ந்து ஆஷஸ் கோப்பையை வைத்துள்ளது. ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி, டிம் பெய்னின் கேப்டன்சியில் தக்கவைத்திருந்தாலும், அதற்கு முழு காரணம் ஸ்மித் தான். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலுமே ஆட்டநாயகன் ஸ்மித் தான். ஸ்மித் ஆடாத மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றது. இதிலிருந்தே ஸ்மித் எந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்தார் என்பதை அறியலாம். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து சாதனை படைத்தார். 

ஸ்மித் அபாரமாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மாற்றம் குறித்த கருத்துகள் வலுப்பெற தொடங்கியுள்ளன. மீண்டும் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்கும் வாய்ப்பிருப்பதாக முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர், ஸ்மித் மறுபடியும் கேப்டனாவார் என நம்பிக்கை தெரிவித்ததுடன், அவர் மறுபடியும் கேப்டனால், முன்பைவிட பன்மடங்கு வலிமையான கேப்டனாக திகழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்நிலையில், ரிக்கி பாண்டிங்கும் ஸ்மித் மீண்டும் கேப்டனாவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆவார் என நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மக்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேப்டனுக்கான கதவை திறந்தே வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை ஸ்மித்தை கேப்டனாக நியமிக்க நினைத்தால், எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 

click me!