அவங்க 2 பேரும் தெறிக்கவிடுறாங்க.. அதனால் அந்த தம்பியோட சோலி முடிஞ்சுது.. தாதா அதிரடி

By karthikeyan VFirst Published Sep 19, 2019, 5:10 PM IST
Highlights

இந்திய ஒருநாள் அணியில் இனி ராகுலுக்கான இடம் சந்தேகம் தான் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 
 

கேஎல் ராகுல் நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். பேட்டிங் டெக்னிக்கை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதை பயன்படுத்தி நன்றாக ஸ்கோர் செய்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்வதுதானே முக்கியம். ஆனால் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறைதான் அடிக்கிறார் ராகுல். அதற்காக மட்டும் அவரை அணியில் வைத்திருக்க முடியாது. எனவே தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் அவருக்கு இடமே கிடைக்கவில்லை. 

கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்ததுதான். அதன்பின்னர் ஆஸ்திரேலிய தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என 5க்கும் மேற்பட்ட போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆடியும் ராகுல் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சதமடிக்கவில்லை என்பதைவிட சரியாக ஆடவேயில்லை. 

அதன் விளைவாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் நீக்கப்பட்டு இளம் வீரரான ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் தான் இந்த நிலைமை என்றால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. 

உலக கோப்பையில், நான்காம் வரிசையிலும் தொடக்க வீரராகவும் இறங்கினார். ஆனால் அதிலும் சோபிக்கவில்லை. ரோஹித் - தவான் தான் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க ஜோடி என்பதால், அவர்களில் ஒருவர் ஆடவில்லை என்றால் மட்டுமே இனிமேல் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படும். அதுவும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். உலக கோப்பையில் நான்காம் வரிசை வீரராக அழைத்து செல்லப்பட்டார் ராகுல். ஆனால் தவான் காயத்தால் ராகுல் தொடக்க வீரராக இறங்க நேரிட்டதால், அந்த வரிசைக்கு அவரால் அர்த்தம் சேர்க்க முடியவில்லை. 

உலக கோப்பைக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் போட்டிகளில், மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் அசத்திவிட்டார். இரண்டு போட்டிகளிலுமே வெவ்வேறு விதமான சூழல்களில் ஆடி அரைசதம் அடித்து, தன்னால் எந்த சூழலுக்கு ஏற்றவாறும் ஆடமுடியும் என்பதை நிரூபித்து காட்டினார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஷ்ரேயாஸ் ஐயரும் மனீஷ் பாண்டேவும் எடுக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் இருவரைத்தான் இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பார்க்கிறது என்பது உறுதியாகிறது. 

இந்நிலையில், இனிமேல் ராகுலுக்கான வாய்ப்பு டவுட்டுதான் என கங்குலி தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கங்குலி எழுதியுள்ள கட்டுரையில், ரோஹித் சர்மாவும் தவானும் தான் இந்திய அணியின் தொடக்க வீரர்கள். டெஸ்ட் அணியிலும் ராகுல் தனது இடத்தை இழந்துவிட்டார். ஒருநாள் அணியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவரும் நான்காம் வரிசைக்கான தேர்வாக இருக்கின்றனர். அதனால் அதிலும் ராகுலுக்கு அவர்கள் இருவரும் கடும் சவாலாக திகழ்கின்றனர். எனவே அதிலும் ராகுலுக்கு இடமில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 

click me!