Ravichandran Ashwin: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டது ஏன்..? இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 3:11 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களையும் இழந்த இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடுகிறது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்த தொடர்களுக்கான இந்திய அணிகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு அணிகளிலும் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார்.

2017ம் ஆண்டுக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அஷ்வின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அஷ்வின், எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அஷ்வின் புறக்கணிக்கப்பட்ட அதேவேளையில், குல்தீப் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டார். குல்தீப் - சாஹல் ஜோடி மீண்டும் ஒருசேர இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். எனவே அஷ்வின் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓரங்கட்டப்பட்டாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.  

ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோரை அணியில் எடுக்காததற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்த பிசிசிஐ, அஷ்வின் புறக்கணிப்பு பற்றி மட்டும் தெளிவுபடுத்தாததால் அவர் ஓரங்கட்டப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியமில்லை.

இந்நிலையில், அஷ்வின் காயம் காரணமாகத்தான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது மணிக்கட்டு மற்றும் கணுக்கால் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் தான் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
 

click me!