ரோவ்மன் பவல் அபார சதம்; பூரன் அதிரடி பேட்டிங்..! 3வது டி20யில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 2:26 PM IST
Highlights

3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
 

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 2-1என முன்னிலை வகிக்கிறது.

3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் (10) மற்றும் ஷேய் ஹோப்(4) ஆகிய இருவரும் சொதப்ப, 48 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

3வது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனும் ரோவ்மன் பவலும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பூரன் 43 பந்தில் 70 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, பவல் அதிரடியாக ஆடி சதமடித்தார். 53 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 107 ரன்களை குவித்தார் பவல். பவல், பூரனின் அதிரடியால் 20 ஓவரில் 224 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

225 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் பாண்டன் அடித்து ஆடி 39 பந்தில் 73 ரன்களை குவித்தார். பின்வரிசையில் அதிரடியாக ஆடிய ஃபில் சால்ட் 24 பந்தில் 57 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 20 ஓவரில் 204 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

இந்த வெற்றியையடுத்து 2-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!