Hanuma Vihari-யை இந்திய அணியில் எடுக்காமல் இந்தியா ஏ அணியில் எடுத்ததற்கான காரணம் இதுதான்..!

By karthikeyan VFirst Published Nov 13, 2021, 2:54 PM IST
Highlights

ஹனுமா விஹாரியை(Hanuma Vihari) நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் எடுக்காமல், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் எடுத்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.
 

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயருக்கு இது அருமையான வாய்ப்பு. ஆனால் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக பேட்டிங் ஆடி, பின்னர் 2 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களிலும் நன்றாக பேட்டிங் ஆடி, கடந்த 3 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்த ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, காயத்துடன் களமிறங்கி 162 பந்துகள் பேட்டிங் ஆடி அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய உதவினார். சிட்னி டெஸ்ட் டிரா ஆனதால்தான் இந்திய அணியால் அந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடிந்தது. இந்திய அணி 2வது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக விஹாரியும் திகழ்ந்தார்.

அந்த தொடருக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விஹாரி ஆடவில்லை. இங்கிலாந்து இந்தியாவிற்கு வந்து ஆடிய டெஸ்ட் தொடர், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய தொடர்களில் விஹாரி ஆடவில்லை. கடைசியாக ஆடிய போட்டி வரை அருமையாக ஆடிய ஹனுமா விஹாரி, அப்படியே ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹனுமா விஹாரி புறக்கணிப்பை கடுமையாக விமர்சித்து தள்ளினர்.

அடுத்த சில மணிநேரங்களில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த இந்தியா ஏ அணியில் விஹாரி பெயர் இடம்பெறவில்லை. இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட பிறகு, அவரது பெயர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றது.

இந்நிலையில், அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு, இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறது. தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு முன்பாகவும், இந்தியா ஏ அணி அந்த நாட்டிற்கு சென்று ஒரு தொடரில் ஆடுவதை விரும்புபவர். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கான முன் தயாரிப்பிற்காக இந்தியா ஏ தொடரை ராகுல் டிராவிட் விரும்புகிறார். 

எனவே தான், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் இந்தியா ஏ அணியில் இடம்பெற்று முன்கூட்டியே தென்னாப்பிரிக்கா சென்று ஆடுவது, அவர்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதற்காகத்தான் ஹனுமா விஹாரியை இந்திய அணியில் எடுக்காமல் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹனுமா விஹாரி தென்னாப்பிரிக்காவில் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடினால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஆடுவார். இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் விஹாரி மாதிரியான ஸ்பெஷலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவையில்லை. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி/ஷ்ரேயாஸ் ஐயர், ரஹானே ஆகிய ஐவருடன் ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என 6 பேட்ஸ்மேன்கள் போதும். இந்திய ஆடுகளங்களில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய ஸ்பின்னர்களே நன்றாக பேட்டிங் ஆடுவார்கள் என்பதால் கூடுதல் பேட்ஸ்மேன் தேவையில்லை என்ற காரணத்தால் தான் ஹனுமா விஹாரி இந்திய அணியில் எடுக்கப்படாமல், இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்கப்பட்டதன் மூலம், மிடில் ஆர்டரில் விஹாரிக்கு மாற்று வீரராக உருவாக்கப்படுவது காரணமாக இருக்கலாம். விஹாரி ஆடமுடியாத நேரங்களில் அல்லது ரஹானேவின் தொடர் சொதப்பல் தொடர்ந்தால், மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆட ஒரு தரமான பேட்ஸ்மேன் தேவை என்பதால் அதற்கான தயாரிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டுள்ளார்.
 

click me!