இந்திய அணியில் புறக்கணித்த Hanuma Vihari-யை இந்தியா ஏ அணியில் எடுத்து காயத்திற்கு மருந்து போட்ட தேர்வாளர்கள்

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 9:41 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி(Hanuma Vihari) எடுக்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானதையடுத்து, அவரை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் எடுத்துள்ளனர் தேர்வாளர்கள்.
 

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆட கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக ஆடிவந்த ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் அறிமுகமான ஹனுமா விஹாரி, அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அருமையாக ஆடினார். இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நன்றாக பயன்படுத்தி சிறப்பாகவே ஆடினர் ஹனுமா விஹாரி.

12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 624 ரன்கள் அடித்துள்ளார் ஹனுமா விஹாரி. 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கூட, சிட்னி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில், இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது காயத்துடன் களமிறங்கி வலியை பொருட்படுத்தாமல் 162 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரம் போட்டு ஆடினார். அவரது பேட்டிங்கால் தான் இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்தது. ஹனுமா விஹாரி மட்டும் விரைவில் ஆட்டமிழந்திருந்தால், இந்திய அணி அந்த போட்டியில் தோற்றிருக்கக்கூடும். அந்தவகையில், இந்திய அணி ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல ஹனுமா விஹாரியும் காரணமாக இருந்துள்ளார்.

ஆனால் அதுதான் அவர் ஆடிய கடைசி தொடர். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய தொடர்களில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவேயில்லை. ஆடும் லெவன் காம்பினேஷனை கருத்தில்கொண்டே அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் போனதே தவிர, அவர் எந்த தவறும் செய்யவில்லை. 

அப்படியிருக்கையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி ஒட்டுமொத்தமாகவே புறக்கணிக்கப்பட்டிருப்பது வியப்பாகவே இருக்கிறது. 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வே கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது ஹனுமா விஹாரியின் புறக்கணிப்பும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஹனுமா விஹாரி புறக்கணிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், மிகக்கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் அவரை சேர்த்துள்ளது தேர்வுக்குழு. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணியில் ஹனுமா விஹாரியின் இல்லை. இந்திய அணியில் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டதையடுத்து, பெரும் பரபரப்பு கிளம்பிய நிலையில், அதை ஆற்றுவதற்காக இந்தியா ஏ அணியில் அவரை சேர்த்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணி:

பிரியங்க் பன்சால் (கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சர்ஃபராஸ் கான், பாபா அபரஜித், உபேந்திரா யாதவ், ஹனுமா விஹாரி, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், சௌரப் குமார், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், இஷான் போரெல், அர்ஸான் நாக்வஸ்வல்லா.

click me!