இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுகிறார் Virat Kohli - ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 8:54 PM IST
Highlights

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த சாதனைக்குரிய கேப்டன் கோலி.

வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பேட்டிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

ஆனாலும் ஐசிசி டிராபியை வெல்லவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவருகிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்றது.

என்னதான் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலும்,  உலக கோப்பையை வெல்லாதது கோலியின் கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லிலும் கோப்பையை வென்றதில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இவையெல்லாம் சேர்ந்து ஒரு மெகா நெருக்கடியாக உருவெடுத்ததன் விளைவாக, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக மோசமாக உள்ளது. 

அதுமட்டுமல்லாது, ஒரு கேப்டனாக அவரது அணி தேர்வு தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறது. அணியின் சிறந்த ஆடும் லெவனுடன் அவர் இறங்குவதில்லை. அதுமட்டுமல்லாது பாரபட்சமான வீரர்கள் தேர்வு, களவியூகங்களில் சிறப்பாக செயல்படாதது என அவரது கேப்டன்சி தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகியே வந்திருக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினை வேண்டுமென்றே ஓரங்கட்டினார் என்பது அப்பட்டமாக தெரிந்தது.  கேப்டன் விராட் கோலியின் ஆட்டிடியூட் சரியில்லை என்று பிசிசிஐயிடம் சீனியர் வீரர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவல் வெளியான ஒருசில நாட்களில் கேப்டன் விராட் கோலி, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், கேப்டன்சியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் என்பதே உண்மை.

டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 அணியின்   கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலக நேரிடும் என்ற பேச்சு அடிபட்டுவரும் வேளையில், இதுகுறித்து கோலியுடன் கடந்த 4 ஆண்டுகளாக நெருங்கி பழகிய ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நம்பர் 1 அணி. எனவே அவர் பேட்டிங்கிலும் டெஸ்ட் அணி கேப்டன்சியிலும் மட்டுமே கவனம் செலுத்த நினைத்தால் ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்து விலகுவார். ஆனால் இப்போது உடனே விலகுவாரா என்றால் அது சொல்லமுடியாது; ஆனால் விலகுவார். நிறைய வெற்றிகரமான கேப்டன்கள், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகியதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம் என்றார் ரவி சாஸ்திரி.
 

click me!