ஐபிஎல் தொடரில் 16 சீசன்களாக அர்சிபி ஆண்கள் டீம் டிராபிக்காக போராடி வந்த நிலையில், 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இதில், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்று விளையாடின. கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
எலிமினேட்டர் போட்டியில் கடைசி ஓவரில் 5 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் தோற்கவே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு ஆர்சிபி அணிக்கு கிடைத்தது. இதையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 114 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆர்சிபி அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் களமிறங்கி விளையாடி ரன்கள் குவித்தனர். ஷோஃபி டிவைன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்லீஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் பொறுமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியாக ஆர்சிபி மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஒரு சீசன்களில் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணியானது டிராபியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.
ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், பாப் டூப்ளெசிஸ் ஆகியோர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது ஒரு முறை கூட டிராபையை கைப்பற்றவில்லை. ஆனால், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்சிபி அணியானது டிராபியை கைப்பற்றி சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது.