
மகளிர் பிரீமியர் லீக் 2024 தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் சென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஷஃபாலி வெர்மா மற்றும் மெக் லேனிங் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
இதில் ஷஃபாலி வெர்மா மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், ஷோஃபி மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா ஷோபனா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 114 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி ரன்கள் குவித்தனர். ஷோஃபி டிவைன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்லீஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் பொறுமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியாக ஆர்சிபி மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.