மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக விளையாடியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2024 தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் சென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஷஃபாலி வெர்மா மற்றும் மெக் லேனிங் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
இதில் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் அரைசதம் அடிக்க இருந்த நிலையில், ஷோஃபி மோலினெக்ஸ் ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷஃபாலி வர்மா 27 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து வந்த அலீஸ் கேப்ஸி தலைக்கு மேல் தூக்கி அடிக்க முயற்சித்து கிளீன் போல்டானார்.
டெல்லி கேபிடல்ஸ் 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இவரைத் தொடர்ந்து கேப்டன் மெக் லேனிங் 23 ரன்களில் ஷ்ரேயங்கா பாட்டீல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பந்து வீச வந்த ஆஷா ஷோபனா தனது ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
ஸ்பின் பவுலரான ஷ்ரேயங்கா பாட்டீல் இடது கையில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும் வலது கையால் பந்து வீசி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஷ்ரேயங்கா பாட்டீல் சுழலுக்கு மெக் லேனிங், மின்னு மணி (5), அருந்ததி ரெட்டி (10), தனியா பாட்டியா (0) என்று வரிசையாக ஆட்டமிழந்துள்ளனர்.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஷஃபாலி வெர்மா 44 ரன்னும், மெக் லேனிங் 23 ரன்னும் எடுத்திருந்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இது முதல் சீசனைப் போன்றே நடந்துள்ளது. முதல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக மெக் லேனிங் 35 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.