ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் இடம் பெற்ற 6 அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், தற்போது நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. மேலும், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் இடம் பெற்ற வீராங்கனைகள் அனைவரும் இந்த சீசனிலும் இறுதிப் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று தான் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனிலும் டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு வந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கும் தேர்வு செய்தது. இதில் டெல்லி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் சீசனிலே டிராபியை கைப்பற்றியது.
ஆனால், 2ஆவது சீசனில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இதன் காரணமாக ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட ஆர்சிபி முன்னேறவில்லை. 8 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது அணியாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று நீயா நானா ரேஸில் மும்பையை வீழ்த்தி கம்பீர தோரணையோடு இறுதிப் போட்டிக்கு வந்தது.
தற்போது நடைபெறும் இறுதிப் போட்டியில் முதல் சீசனிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட டெல்லி இந்த சீசனில் டிராபியை தட்டி தூக்குமா? அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டிராபியை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டாஸ் மற்றும் டெல்லி வீராங்கனைகள் அப்படியே முதல் சீசனைப் போன்று நடப்பதால் இந்த சீசன் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்குமா என்பதை பார்ப்போம்….