IPL 2022 Retention: உன் சேவை இனிமேல் எங்களுக்கு தேவையில்லை..! செல்லப்பிள்ளையை கழட்டிவிட்ட ஆர்சிபி

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 10:46 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி தக்கவைத்த வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அந்தவகையில், இன்றுதான் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி, ஆனால் ஏமாற்றத்துடனேயே ஒவ்வொரு சீசனையும் முடிக்கும் ஆர்சிபி அணி, அடுத்த சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதற்கிடையே, கேப்டனாக இருந்த விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். எனவே அடுத்த சீசனில் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. 

கேப்டன்சியிலிருந்து விலகினாலும் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துவிட்டதால், விராட் கோலி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் 4 வீரர்களுக்கு, முதல், 2வது, 3வது, 4வது வீரர் என்ற வரிசைப்படி ஊதியத்தொகை ஒதுக்கப்பட வேண்டும். 

முதல் வீரராக தக்கவைக்கப்படுபவருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் வழங்கவேண்டும். அந்தவகையில் ஆர்சிபி அணி, முதல் வீரராக விராட் கோலியையும், 2வது வீரராக க்ளென் மேக்ஸ்வெல்லையும், 3வது வீரராக முகமது சிராஜையும் தக்கவைத்துள்ளது.

அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்த ரிஸ்ட் ஸ்பின்னரும், விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவருமான யுஸ்வேந்திர சாஹலை 4வது வீரராகக்கூட ஆர்சிபி அணி தக்கவைக்கவில்லை. ரூ.6 கோடிக்கான 4வது வீரராகக்கூட சாஹலை ஆர்சிபி தக்கவைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

click me!