IND vs NZ இந்தியா 2 செசனில் மேட்ச்சை முடிச்சுரும்னு நெனச்சேன்..! இந்திய பவுலர்கள் மீது இன்சமாம் அதிருப்தி

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 10:01 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி ஒரு விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியாததால் போட்டி டிரா ஆன நிலையில், அந்த போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தின் 2 செசன்களில் ஆட்டத்தை இந்திய அணி முடித்துவிடும் என கருதியதாக இன்சமாம்  உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் அடித்தன. 

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ய, 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் சில ஓவர்கள் எஞ்சியிருக்க, இந்திய அணி டிக்ளேர் செய்துவிட்டு நியூசிலாந்தை இலக்கை விரட்ட பணித்தது.

284 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தாலும், டாம் லேதமும், நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில்லும் இணைந்து அபாரமாக ஆடி கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் நியூசிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் சோமர்வில்லும்(36), டாம் லேதமும் ஆட்டமிழந்த பின்னர், அந்த அணி வெற்றியை பற்றி யோசிக்கவேயில்லை. முழுக்க முழுக்க டிராவிற்காக ஆடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். இது அவர்கள் ஆடிய விதத்திலிருந்தே தெரிந்தது. 2வது செசன் முடிவில் 4 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தது நியூசிலாந்து அணி. டிராவிற்காக கவனமாக ஆடியும் கூட, கடைசி செசனில் 5 விக்கெட்டுகளை இழந்தது.

விரட்டக்கூடிய இலக்காக இருந்தபோதிலும் கூட, அதை விரட்ட முயற்சி கூட செய்யவில்லை நியூசிலாந்து அணி.  அதேவேளையில், இந்திய பவுலர்களும் ஸ்பின்னிற்கு சாதகமான கண்டிஷனில் நியூசிலாந்தை ஆல் அவுட் செய்ய முடியாதது கவலையளிக்கும் விஷயம் தான்.

கடைசி ஒரேயொரு விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியாததால் இந்த போட்டி டிரா ஆன நிலையில், இந்த போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக், நியூசிலாந்து அணி நன்றாக ஆடியது என்று சொல்வதா அல்லது இந்திய அணி துரதிர்ஷ்டசாலி என்று சொல்வதா என எனக்கு தெரியவில்லை. இந்தமாதிரியான ஒரு பிட்ச்சில் கடைசி நாள் முழுக்க நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடியது தரமான சம்பவம்.

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனை தவிர, ஸ்டார் பேட்ஸ்மேன் என்று வேறு யாருமே இல்லை. ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக பேட்டிங் ஆடினர். நியூசிலாந்து அணி வெற்றிக்காக ஆடவில்லை என்று முடிவு செய்ததுமே, வீரர்களிடம் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஆடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  அதை அவர்கள் செவ்வனே செய்தார்கள். ஆனால் அந்த பிட்ச்சில் இந்திய பவுலர்கள், இரண்டே செசனில் மேட்ச்சை முடித்துவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
 

click me!