
RCB fans demand to make Bengaluru the capital: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்ட நிலையில், ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பைனலுக்குள் சென்றுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து கோப்பைக்காக ஏங்கிக் கிடக்கும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த முறை அந்த கனவு நனவாகும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டம்
இது ஒருபக்கம் இருக்க, ஆர்சிபி பைனலுக்கு போனதை, ஏதோ கப் வாங்கி விட்டதை போன்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 'இனிமே கிரிக்கெட் என்றால் நாங்க தான். எங்கள யாரும் அடிக்க முடியாது' என்ற ரேஞ்சுக்கு ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். போதைக்குறைக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே உள்ளிட்ட மற்ற அணிகளின் ரசிகர்களையும் வம்பிழுத்து வருகின்றனர்.
பெங்களூருவை தலைநகராக்க வேண்டும்
வெற்றி போதையில் மிதக்கும் ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூருவை இந்தியாவின் தலைநகராக மாற்ற வேண்டும் என வித்தியாசமான கோரிக்கை வைத்துள்ளனர். ஏன்டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று ஆர்சிபி ரசிகர்களிடம் கேட்டால், ''ஏற்கனவே நன்கு அறியப்பட்டபடி, தலைநகர் டெல்லி மாசுபாட்டின் தாயகம் என்ற கெட்ட பெயரைப் பெற்றுள்ளது. அதனால்தான் டெல்லியுடன் ஒப்பிடும்போது பெங்களூரு எல்லா வகையிலும் முதலிடத்தில் உள்ளது.
இங்கு வானிலை நன்றாக இருக்கிறது. இது ஒரு ஐடி மையமாகவும் அறியப்படுகிறது. தொடக்க நிறுவனங்களில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. டெல்லியுடன் ஒப்பிடும்போது மாசுபாடும் குறைவு. அதுமட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான்'' என்று கூறியுள்ளனர்.
ஆர்சிபி ரசிகர் விழா
மறுபுறம், இறுதி ஆட்ட நாளை "ஆர்சிபி ரசிகர் விழா"வாகவும், மாநிலம் தழுவிய அரசு விடுமுறையாகவும் அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெல்காம் மாவட்டம் கோகாக்கைச் சேர்ந்த சிவானந்த மல்லன்னவர் என்ற நபர், முதல்வர் சித்தராமையாவுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் எழுதி எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்
கோப்பை எங்களுடையது; தலைநகரமும் எங்களுடையது
இத்துடன் நிறுத்தாமல் பேசிய ரசிகர்கள், ''இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல, இப்போது பெங்களூருக்கு இன்னொரு இறகு வந்துவிட்டது. அதுதான் ஆர்சிபி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வாங்க போகிறதே. அது போதாதா?'' என்று கூறுகின்றனர். மேலும் ''கோப்பை எங்களுடையது, இப்போது தலைநகரமும் எங்களுடையது" என்று ரசிகர்களின் ட்வீட் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற அணிகளின் ரசிகர்கள் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்து வரும் மற்ற அணிகளின் ரசிகர்கள், ''இவங்க அக்கபோருக்கு தாங்க முடியல. பைனலுக்கு சென்றதுக்கே இப்படி. ஒருவேளை பைனலில் ஜெயித்து கப் வாங்கிட்டாங்கனா என்ன ஆட்டம் போடுவாங்களோ'' என வேடிக்கையாக கூறி வருகின்றனர்.