9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பவம் செய்த ஆர்சிபி! 4வது முறை ஐபிஎல் பைனலுக்குத் தகுதி!

Published : May 30, 2025, 01:31 AM ISTUpdated : May 30, 2025, 01:52 AM IST
9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பவம் செய்த ஆர்சிபி! 4வது முறை ஐபிஎல் பைனலுக்குத் தகுதி!

சுருக்கம்

தகுதிச் சுற்று 1 இல் பஞ்சாப் கிங்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

முல்லான்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்று 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஆர்சிபி ஒட்டுமொத்தமாக 4வது முறை பைனலில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஆர்சிபி டாஸ் வென்று பீல்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து 102 என்ற இலக்கை ஆர்சிபி எளிதாக சேஸ் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டின் அரை சதத்தால் RCB அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டியது.

2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, RCB அணி IPL இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி தனது முதல் IPL கோப்பையை வெல்லும் முயற்சியில் களமிறங்கும்.

 

 

 

பஞ்சாப்பின் சொதப்பல்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்ட முயற்சி பின்னடைவை சந்தித்தது. பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க சிரமப்பட்டனர். ஆனால், ஆர்சிபி பேட்டிங்கில் பில் சால்ட் எளிதாக பவுண்டரிகள் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அவர் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்து 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

 

 

 

ஆர்சிபி அபார பந்துவீச்சு

பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசல்வுட் (3/21), புவனேஷ்வர் குமார் (1/17) மற்றும் யஷ் தயால் (2/26) ஆகியோர் அபாரமாக பந்துவீசி பஞ்சாப் அணியின் ரன்களை கட்டுப்படுத்தினர். லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மா (3/17) பஞ்சாப் அணியின் கடைசி வீரர்களை வீழ்த்தினார்.

யஷ் தயாலின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா வெளியேறியதில் இருந்து பஞ்சாப் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங் (10 பந்துகளில் 18 ரன்கள்) வெளியேறினார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஹேசல்வுட்டின் பந்துவீச்சில் மூன்றாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹேசல்வுட் ஜோஷ் இங்கிளிஸையும் வீழ்த்தி பஞ்சாப் அணியின் நம்பிக்கையை குலைத்தார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் (17 பந்துகளில் 26 ரன்கள்), சஷாங்க் சிங் மற்றும் முஷீர் கான் ஆகியோர் அடுத்தடுத்து சுயாஷ் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினர்.

சால்ட் அபார ஆட்டம்

102 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணி, கைல் ஜேமீசனின் பந்துவீச்சில் விராட் கோலியை இழந்தது. அவர் 12 பந்துகளில் 12 ரன் எடுத்து வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சால்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், முஷீர் கானின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

 

 

பஞ்சாப் அணிக்கு மற்றொரு வாய்ப்பு

ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2வது தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் களமிறங்கி, இறுதிப் போட்டிக்குள் நுழைய முயற்சிக்கும்.

“நாங்கள் மீண்டும் திட்டமிட வேண்டும். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், இன்னும் போட்டி முடியவில்லை,” என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டிக்குப் பிறகு கூறினார்.

நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டியில் வெல்லும் அணி 2வது தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!
ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!