தோனியை பார்க்க சென்ற ரவீந்திர ஜடேஜா அவரது வீட்டு கேட்டின் முன்பு நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இது தோனியின் சொந்த ஊர் என்பதால், இந்த டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இதன் காரணமாக 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்கு வரவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7 ஆம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், தோனியின் தளபதியுமான ரவீந்திர ஜடேஜா தோனியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். தோனியின் ரசிகனாக அவரது வீட்டு கேட் முன்பு நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதன் பிறகு தோனியை சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து புகைப்படங்களை அவர் பதிவிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்தில் சிஎஸ்கேயின் வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜாவை அலெக்காக தூக்கி தனது மகிழ்ச்சியை தோனி வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.