கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், மழையின் காரணமாக போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து மீண்டும் ரிசர்வ் டேயில் போட்டி நடத்தப்பட்டது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விருத்திமான் சகா 54 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 215 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் தொடக்க வீரர்க்ளாக களமிறங்கினர். மூன்று பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை கன மழையாக பெய்யத் தொடங்கியது. கடைசியாக போட்டியானது நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மேலும், சிஎஸ்கே வெற்றிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டெவோன் கான்வே 47 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்கள், அஜின்க்யா ரஹானே 27 ரன்கள், அம்பத்தி ராயுடு 19 ரன்கள் எடுக்க கடைசியாக ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில், கடைசி ஓவரை யாஷ் தயாள் விசீனார். அந்த ஓவரில், சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் 4 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்தில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தில் ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் விளாசினார். கடைசி பந்தில் பவுண்டரி விளாச, சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனானது. சிஎஸ்கேயின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜாவை, தோனி தனது தோளில் தூக்கிய புகைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 17ஆவது ஐபிஎல் சீசன் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆனால், இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு சிறப்பு மரியாதை செய்ய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.