இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ரவீந்திர ஜடேஜா 2ஆவது போட்டியிலிருந்து விலகிய நிலையில் தற்போது அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸின் போது ரன் எடுக்க ஓடிய போது ரவீந்திர ஜடேஜாவிற்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் எடுத்த நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இந்தப் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தான் ரவீந்திர ஜடேஜா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதே போன்று வலது காலில் தொடைப் பகுதியில் தசை நார் வலி ஏற்பட்ட நிலையில் கேஎல் ராகுல் 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரவ் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
இந்த நிலையில், தான் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்பட்ட காயம் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இன்று எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு இந்திய அணி அறிவிக்கப்படும் நிலையில், அதில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலுக்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெர்மனி சென்று அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது அதே இடத்தில் தான் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆதலால், ஓரிரு போட்டிகளுக்கு பிறகு ராகுல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.