இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்டநாயகன் விருது வென்று விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா முதல் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதே போன்று பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 126 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடி 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 556 ரன்கள் குவித்தது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் தான் 35 வயதான ஜடேஜா பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரையில் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 3005 ரன்கள் குவித்துள்ளார். இதில், 4 சதம் மற்றும் 20 அரைசதம் குவித்துள்ளார்.
இதே போன்று பவுலிங்கில் 287 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 13 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த நிலையில், 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியயுள்ள ஜடேஜா, கும்ப்ளே மற்றும் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் ஜடேஜா 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதே போன்று விராட் கோலியும் 113 போட்டிகளில் விளையாடி 10 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இந்த நிலையில் தான் ரவீந்திர ஜடேஜா இவர்களது சாதனையை சமன் செய்துள்ளார்.
ராகுல் டிராவிட் 163 போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஆவது போட்டியில் ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றால் கோலி மற்றும் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.