ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயாரது உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் அவரது மனைவி ப்ரீத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக 98 போட்டிகளில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் குவித்தது. இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் இந்தியா 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக 556 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 557 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில், 122 ரன்கள் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியின் 2ஆவது நாளின் போது அஸ்வின் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். அஸ்வினின் தாயாரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிசிசிஐ ஏற்பாடு செய்து கொடுத்த தனி விமானம் மூலமாக அஸ்வின் சென்னைக்கு சென்றார். தாயாரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், மீண்டும் 4ஆவது நாள் போட்டியில் இடம் பெற்றார். இதில், அவர் கடைசியாக பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்த நிலையில் அஸ்வின் மனைவி ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஹைதராபாத் டெஸ்ட்டிலேயே 500 ஆவது விக்கெட்டை வீழ்த்துவார் என்று காத்திருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. விசாகப்படினத்தில் அது நடக்கும் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை.
ஆனால், 499 விக்கெட்டுகள் கைப்பற்றிய போது டன் கணக்கில் இனிப்பு வாங்கி கொடுத்தோம். ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், 500ஆவது மற்றும் 501ஆவது விக்கெட்டிற்கு இடையில் நிறைய நடந்துவிட்டது. வாழ்க்கையில் நடந்த நீண்டதொரு 48 மணி நேரம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.