ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியின் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி பந்தை மேலே தூக்கி அடிக்கவும் நான் நினைத்துவிட்டேன், கேட்சை கூட பார்க்கவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணிக்கு 2 ரன்களுக்குள் ரோகித் சர்மா, இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் கோலி 12 ரன்களில் கொடுத்த கேட்சை மிட்செல் மார்ஷ் கோட்டைவிட்டார். இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது: விராட் கோலி பந்தை தூக்கி அடித்தார். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக டிரெஸிங் ரூமை விட்டு வெளியில் ஓடி வந்தேன். சரி, இன்று அவ்வளவு தான் முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். அதன் பிறகு போட்டி முடிந்ததும் என்னை எழுப்பி விடுங்கள் என நினைத்தேன். கேட்சை கூட பார்க்காமல் டிரெஸிங் ரூமிற்கு சென்றேன்.
ஆனால் பந்தை தவற விட்ட பிறகு ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது, அதே இடத்தில் நான் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சம் கூட அங்கிட்டு இங்கிட்டு எங்கும் நகரவே இல்லை. போட்டி முடியும் வரையில் அப்படியே அமர்ந்திருந்தேன். இதனால், என்னுடைய கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது என்று கூறியுள்ளார்.