பேட்ஸ்மேனான நான் ஸ்பின்னர் ஆனதே ஹர்பஜனை பார்த்துத்தான்..! ரவிச்சந்திரன் அஷ்வின் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 4:19 PM IST
Highlights

பேட்ஸ்மேனாக கிரிக்கெட் ஆட தொடங்கிய, தான் ஸ்பின்னர் ஆனதே ஹர்பஜன் சிங்கை பார்த்துத்தான் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
 

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணிக்காக 2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னராக திகழ்கிறார்.

10 ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவரும் அஷ்வின், அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், 79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் அவரது 80வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 419 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஹர்பஜன் சிங்கை விட அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

ஹர்பஜன் சிங் 190 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் 150 இன்னிங்ஸ்களில் 419 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் ரெக்கார்டை தகர்த்தது குறித்து பேசியுள்ள அஷ்வின், நான் இந்த இடத்திற்கு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். எனது ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆட நினைக்கிறேன். ஹர்பஜன் சிங்கை முந்தியது மிகப்பெரிய மைல்கல். 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிங் வீசிய அவரது பிரபலமான ஸ்பெல்லில் கவரப்பட்டவன் நான். நான் ஒரு ஸ்பின்னராவேன் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பேட்ஸ்மேனாகத்தான் கிரிக்கெட் ஆட தொடங்கினேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஹர்பஜன் சிங்கின் அந்த ஸ்பெல்லை பார்த்துத்தான் ஆஃப் ஸ்பின்னரானேன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.

2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் 4 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் சிங், 2வது டெஸ்ட்டில் 13 விக்கெட்டுகளையும், 3வது டெஸ்ட்டில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அந்த தொடரை 2-1 என வெல்ல காரணமாக திகழ்ந்தார். அந்த தொடரின் நாயகனும் அவர் தான். ஸ்டீவ் வாக் தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த ஆஸ்திரேலிய அணியை 2001ல் அலறவிட்டவர் ஹர்பஜன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!