BAN vs PAK முதல் டெஸ்ட்டில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 2:44 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, லிட்டன் தாஸின் அபார சதம் (114) மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமின் பொறுப்பான பேட்டிங்கால் (91) முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் மட்டுமே சிறப்பாக  பேட்டிங் ஆடினர். அபித் அலி அபாரமாக ஆடி சதமடித்தார். அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷாஃபிக் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சதமடித்த அபித் அலி 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஃபஹீம் அஷ்ரஃப் மட்டும் 38 ரன்கள் அடித்து சிறிய பங்களிப்பு செய்தார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 286ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

44ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேச அணி, 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த லிட்டன் தாஸ் மட்டும் இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 59 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடவில்லை.  ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கில் சரணடைந்த வங்கதேச அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

மொத்தமாக 201 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேச அணி, 202 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. 202 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவரும் இந்த இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடினர். 4ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 109 ரன்கள் அடித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் அப்துல்லா ஷாஃபிக் 73 ரன்னிலும், அபித் அலி 91 ரன்னிலும் ஆட்டமிழக்க, அசார் அலியும் பாபர் அசாமும் இணைந்து ஆட்டத்தை முடித்தனர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!