டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார். அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய கண்டிஷனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின், எதிர்கொள்ள மிகக்கடினமான பவுலர். ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் சாமர்த்தியமான, புத்திக்கூர்மையான அஷ்வினின் பவுலிங்கை எதிர்கொள்வது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் கடினமான காரியமே.
இந்திய அணி 2012ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்றதில்லை. தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை இந்திய மண்ணில் வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடப்பு தொடரை வென்றால் அது 15வது டெஸ்ட் தொடர் வெற்றியாக அமையும். இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி தொடர் வெற்றிகளை குவிக்க முக்கியமான காரணம் அஷ்வின் தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்குரிய ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தினார். அபாரமாக ஆடி 480 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்ய அஷ்வின் தான் முக்கிய காரணம். பின்வரிசையில் கடைசி 5 வீரர்களையும் அஷ்வின் தான் வீழ்த்தினார்.
இந்த இன்னிங்ஸில் அஷ்வின் வீழ்த்தியது இந்திய மண்ணில் அவரது 26வது 5 விக்கெட். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து 2ம் இடத்தை ரங்கனா ஹெராத்துடன் பகிர்ந்துள்ளார் அஷ்வின்.
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 முறை 5 விக்கெட் வீழ்த்தி அனில் கும்ப்ளே தான் இந்திய மண்ணில் அதிக 5 விக்கெட் வீழ்த்திய பவுலராக இருந்தார். 26 முறை 5 விக்கெட் வீழ்த்தி கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஷ்வின். முரளிதரன் இலங்கையில் 45 முறை 5 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய மண்ணில் இன்னும் 20 முறை 5 விக்கெட் வீழ்த்தினால் முரளிதரனின் சாதனையை அஷ்வின் முறியடிக்கலாம்.