இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்ய உதவினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறவும் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் ஆடிவருகிறது.
அகமதாபாத்தில் நடந்துவரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஷேன் வெறும் 3 ரன்களுக்கு உடனடியாக ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நன்றாக ஆடினார். ஆனால் அவரை 38 ரன்களுக்கு ஜடேஜா வீழ்த்தினார். பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 17 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
170 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜாவும் கேமரூன் க்ரீனும் சேர்ந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் இணைந்து 60 ஓவர்கள் பேட்டிங் ஆடி 208 ரன்களை குவித்தனர். இருவருமே சதமடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய கேமரூன் க்ரீனை 114 ரன்களுக்கு அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி(0), மிட்செல் ஸ்டார்க்(6) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார். தொடக்க வீரராக களமிறங்கி 422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்களை குவித்த உஸ்மான் கவாஜாவை அக்ஸர் படேல் வீழ்த்தினார்.
பின்வரிசையில் டாட் மர்ஃபி 41 ரன்களும், நேதன் லயன் 34 ரன்களும் அடித்து பங்களிப்பு செய்தனர். பின்வரிசை வீரர்கள் அனைவரையுமே அஷ்வின் வீழ்த்தினார். இந்திய அணியில் எந்த பவுலரும் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்ய உதவினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.