
சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்திய அணிக்காக 2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னராக திகழ்கிறார். 10 ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவரும் அஷ்வின், அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், 79 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் அவரது 80வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அந்த போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 419 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.
ஹர்பஜன் சிங் 190 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் 150 இன்னிங்ஸ்களில் 419 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், மும்பையில் நடந்துவரும் 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அஷ்வின். இதன்மூலம் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓரே ஆண்டில் 4வது முறையாக 50க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிகமுறை ஒரு ஆண்டில் 50க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே 2015ல் 62 விக்கெட், 2016ல் 72 விக்கெட், 2016ல் 56 விக்கெட் வீழ்த்திய அஷ்வின், இந்த ஆண்டும் 50க்கும் அதிகமான விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிகமுறை ஒரு ஆண்டில் 50க்கும் அதிகமான விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் தலா 3 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். அவர்களை சமன்செய்திருந்த அஷ்வின், இந்த ஆண்டு 4வது முறையாக 50க்கும் அதிகமான விக்கெட் வீழ்த்தி, ஒரு ஆண்டில் அதிகமுறை இந்த மைல்கல்லை எட்டிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.