IND vs NZ டெஸ்ட்: சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த்துடன் சாதனை பட்டியலில் இணைந்த மயன்க் அகர்வால்..!

By karthikeyan VFirst Published Dec 5, 2021, 5:43 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்ததன் மூலம், சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் மயன்க் அகர்வால்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்கள் அடித்தார். புஜாரா மற்றும் கில் ஆகிய இருவரும் தலா 47 ரன்கள் அடித்தனர்.  கேப்டன் கோலி 36 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய அக்ஸர் படேல், 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

540 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்துள்ளது. ஹென்ரி நிகோல்ஸும், ரவீந்திர ஜடேஜாவும் ஆடிவருகின்றனர். இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 5 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் எளிதாக ஜெயித்துவிடும்.

மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதம் (150) மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் (62) அடித்ததன் மூலம், மும்பையில் நடந்த டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன், 1978ல் சேத்தன் சௌகான் (52, 84),  அதே 1978ல் (205, 73), 1987ல் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (71, 65) ஆகிய மூவரும் மும்பையில் நடந்த டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்திருந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் மயன்க் அகர்வாலும் இணைந்துள்ளார்.
 

click me!